மின்வாரியத் தேர்வில் திடீர் மாற்றம்; 1,850 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.. இனி வெறும் காலில் கம்பம் ஏற வேண்டாம்... ‘ஷூ’ அணிய அனுமதி!

 
மின் கம்பம் மின் கம்பம்

தமிழக அரசு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான வேலைவாயற்ற இளைஞர்கள் மற்றும் மின்சார வாரியத் தேர்வர்களுக்குத் தற்போது மின்சாரத் துறை அமைச்சகம் மற்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக இருக்கும் 1,850 'கள உதவியாளர்'  பணியிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இப்பணிக்கான முதற்கட்ட எழுத்துத் தேர்வுகள் முடிவடைந்து, அடுத்தகட்ட முக்கிய நிகழ்வான 'உடல் தகுதித் தேர்வு' விரைவில் தொடங்கவுள்ளது.

டிரான்ஸ்பார்மர் மின் கம்பம்

இந்தக் கள உதவியாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வில், பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மிகக் கடுமையான, ஆபத்தான பழைய விதிமுறை ஒன்று  முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வரை, தேர்வர்கள் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி,  வெறும் காலில்  தான் செங்குத்தான இரும்பு மின் கம்பத்தில் வழுக்காமல் ஏற வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தது. இதனால் பல தேர்வர்கள் கால்களில் பலத்த காயமடைந்து தங்களது வாய்ப்புகளை இழந்து வந்தனர். இந்த விவகாரத்தில் தேர்வர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தற்போது விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள அரசாங்க விதிமுறைகளின்படி, இனிமேல் தேர்வர்கள் வெறும் காலில் மின் கம்பம் ஏறத் தேவையில்லை. அதற்குப் பதிலாக, மின் கம்பம் ஏறுவதற்கென்றே சந்தையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அதிநவீனப் பாதுகாப்பு 'போல் கிளைம்பிங் ஷூ'க்களை தாராளமாக அணிந்து கொண்டு மின் கம்பத்தில் ஏறலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகள்!!

இருப்பினும், ஷூ அணிந்து ஏறுபவர்களுக்கான காலக்கெடு மற்றும் இலக்குகளில் புதிய கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும்  30 அடி உயரமுள்ள மின் கம்பத்தில், துல்லியமாக '8 நிமிடங்களுக்குள்' எவ்விதத் தடுமாற்றமும் இன்றி  ஏறித் தங்களது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.