போலீசாருக்குள் திடீர் மோதல் - சென்னை காவல் நிலையத்தில் பரபரப்பு!
சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக, சட்டம் ஒழுங்கு பிரிவு ஆய்வாளருக்கும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதல் காவல் துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே காவல் நிலைய வளாகத்தைப் பகிர்ந்து கொள்ளும் இரு வேறு பிரிவினரிடையே இந்த வாக்குவாதம் அரங்கேறியுள்ளது.
சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலைய வளாகத்திற்குள் சட்டம் ஒழுங்கு பிரிவும், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று காவல் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே திடீரெனப் பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் ரோகிணி, "காவல் நிலைய வளாகத்திற்குள் சட்டம் ஒழுங்கு பிரிவு சார்ந்த அரசு மற்றும் காவலர்களின் வாகனங்களை மட்டுமே நிறுத்த வேண்டும், போக்குவரத்து பிரிவினர் தங்களது வாகனங்களை இங்கு நிறுத்தக் கூடாது" எனக் கடுமையான தொனியில் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆய்வாளரின் இந்த உத்தரவால் அதிருப்தியடைந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், அவரிடம் நேரடியாக விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பு காவலர்களுக்கும் இடையே காவல் நிலைய வளாகத்திலேயே தள்ளுமுள்ளு மற்றும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
பொதுமக்களின் புகார்களைப் பெற்றுப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் நிலையத்திற்குள்ளேயே, சட்டத்தை நிலைநாட்டும் இரு வேறு பிரிவு போலீசார் தங்களுக்குள் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு வந்திருந்த பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த உயர் அதிகாரிகள், இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, காவல் நிலைய வளாகப் பகிர்வு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
