திடீர் பரபரப்பு... இந்திய எல்லையில் போர் விமானங்களைக் குவிக்கும் சீனா!

 
சீனா போர் விமானம்

இந்திய எல்லையை ஒட்டியுள்ள முக்கிய விமானப் படைத் தளங்களில் 5-ஆம் தலைமுறையைச் சேர்ந்த ஜே-20 'மைட்டி டிராகன்' ஸ்டெல்த் ரகப் போர் விமானங்களைச் சீனா பெருமளவில் நிலைநிறுத்தியுள்ளதை அண்மைய செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

லடாக்கின் தௌலத் பெக் ஓல்டி எல்லைக்கு மிக அருகில் (சுமார் 245 கி.மீ) அமைந்துள்ள சின்ஜியாங்கின் ஹோடன் விமானப் படைத் தளத்தில் 7 ஜே-20 போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு வடமேற்கே (சுமார் 344 கி.மீ) திபெத்தின் லாவ்ஸா பகுதியில் உள்ள தம்ஷுங் தளத்தில் 4 ஜே-20 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ராணுவம் எல்லை

இந்திய எல்லையைக் குறிவைத்து ஒரே நேரத்தில் 11-க்கும் மேற்பட்ட ஜே-20 ஸ்டெல்த் ரக போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினரிடையே பரபரப்பு நிலவுகிறது.

ரடாரில் எளிதில் சிக்காத 'ஸ்டெல்த்' தொழில்நுட்பம் கொண்ட இந்த விமானங்களை அதிக உயரத்தில் இயக்கிப் பழகவும், இந்திய எல்லைக்கு அருகில் தங்களது வான்படை பலத்தை நிரந்தரமாக நிலைநிறுத்தவும் சீனா திட்டமிட்டு வருகிறது.

இந்திய வான்படை தற்போது 4.5 தலைமுறையைச் சேர்ந்த 'ரஃபேல்' மற்றும் சுகோய்-30MKI ரக விமானங்களைக் கொண்டு எல்லைப் பாதுகாப்பைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தியாவின் சொந்த 5-ம் தலைமுறை ஏஎம்சிஏ போர் விமானங்கள் தயாராகும் வரை, எல்லையில் வான் பாதுகாப்பு மற்றும் ரடார் கண்காணிப்பு அமைப்புகளை இந்தியா பலப்படுத்தி வருகிறது.