சர்வதேச விண்வெளி நிலையத்தில் தீடீர் வாயு கசிவு... அமெரிக்க வீரர்களை அவசரமாக வெளியேற்ற நாசா உத்தரவு!

 
சர்வதேச விண்வெளி நாசா சர்வதேச விண்வெளி நாசா

சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீரென ஏற்பட்ட ஆக்சிஜன் கலந்த காற்று கசிவு மற்றும் அமெரிக்க-ரஷ்ய விண்வெளி நிறுவனங்களுக்கு இடையேயான மோதல் போக்கு காரணமாக விண்வெளியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஆபத்தைத் தவிர்க்க 5 அமெரிக்க வீரர்களை அவசரமாக வெளியேற நாசா உத்தரவிட்ட சம்பவம் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவின் 'நாசா' மற்றும் ரஷ்யாவின் 'ரோஸ்கோஸ்மோஸ்' உள்ளிட்ட சர்வதேச விண்வெளி நிறுவனங்கள் இணைந்து விண்வெளியில் ஆய்வு நிலையத்தை இயக்கி வருகின்றன. பூமியைப் போலவே மனிதர்கள் சுவாசிப்பதற்கான ஆக்சிஜன் காற்று நிரப்பப்பட்ட இந்த நிலையத்தில், கடந்த சில மாதங்களாகவே லேசான காற்று கசிவு இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் ரஷ்யாவிற்கு ஒதுக்கப்பட்ட ஆராய்ச்சிப் பகுதியில் இருந்து இந்த கசிவின் அளவு, வழக்கமான ஒரு நாளைக்கு 1 பவுண்ட் என்ற அளவில் இருந்து திடீரென 2 பவுண்டாக (இரண்டு மடங்கு) அதிகரித்தது. இந்த அபாயகரமான கசிவைச் சரிசெய்யும் முயற்சியில் ரஷ்ய விண்வெளி நிறுவனம் இறங்கியது. அப்போது ரஷ்யாவின் தன்னிச்சையான பழுதுபார்க்கும் பணிகளால், விண்வெளி நிலையத்தின் அமெரிக்க ஆராய்ச்சிப் பகுதிக்குச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்தது.

நாசா

விபரீதம் ஏதும் ஏற்படுவதைத் தவிர்க்க, விண்வெளி நிலையத்தில் இருந்த நாசாவின் 'க்ரூ-12' பிரிவைச் சேர்ந்த 4 வீரர்கள் மற்றும் மற்றொரு அமெரிக்க வீரர் என மொத்தம் 5 பேரை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு நாசா அவசர உத்தரவு பிறப்பித்தது.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க, வீரர்கள் அனைவரும் தங்களது விண்வெளி ஆடைகளை அணிந்து கொண்டு, அவசரத் தேவைக்காக நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் எலான் மாஸ்க்கின் 'ஸ்பேஸ்-எக்ஸ் க்ரூ டிராகன்'  விண்கலத்திற்குள் நுழைந்து பூமிக்குத் திரும்பத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

அமெரிக்கா வீரர்களைப் பூமிக்குத் திரும்ப அழைக்கும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியதைத் தொடர்ந்து, விண்வெளியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியது. இதனையடுத்து, ரஷ்யாவின் 'ரோஸ்கோஸ்மோஸ்' நிறுவனம் தங்களது தன்னிச்சையான பழுதுபார்க்கும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்! ஆதாரத்தை வெளியிட்ட நாசா!

சுமார் 2 மணி நேரத் தீவிரக் கண்காணிப்பிற்குப் பிறகு, கசிவின் அளவு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை உறுதி செய்த நாசா, அமெரிக்க வீரர்கள் விண்கலத்தை விட்டு வெளியேறி மீண்டும் விண்வெளி நிலையத்திற்குள் செல்ல அனுமதியளித்தது. இதனால் அவர்களைப் பூமிக்கு அழைக்கும் அவசர உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் 27 ஆண்டுகால வரலாற்றில், இதுவரை விண்வெளி வீரர்கள் யாரும் ஆபத்து காரணமாக முழுமையாக விண்வெளியில் இருந்து வெளியேற்றப்பட்டதில்லை. தொழில்நுட்பச் சிக்கல்கள் வரும்போது இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது வழக்கம் தான் என்றாலும், இம்முறை அமெரிக்கா - ரஷ்யா இடையே ஏற்பட்ட மோதல் விண்வெளி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது விண்வெளி நிலையத்தில் மொத்தம் 7 வீரர்கள் தங்கியிருந்து பாதுகாப்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என நாசா விளக்கம் அளித்துள்ளது.