திடீர் மழை, சுட்டெரிக்கும் வெயில்.. ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ ஆலோசனை!

 
ஐபிஎல் 2026

இந்தியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலவும் கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து வீரர்களையும், ரசிகர்களையும் பாதுகாக்கும் நோக்கில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இது குறித்துப் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்கி, மே மாத இறுதி வரை நடப்பது வழக்கம். நடப்பு 2026-ஆம் ஆண்டு சீசனும் மார்ச் 28 அன்று தொடங்கி மே 31 அன்றுதான் நிறைவடைந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், அடுத்த 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 20-வது சீசனில் இருந்து, போட்டிகளை மார்ச் 10-ஆம் தேதியே தொடங்கி மே 15-க்குள் முழுமையாக முடித்துவிடப் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான கால அட்டவணையைத் தயார் செய்யப் பிசிசிஐ விளையாட்டு மேம்பாட்டுப் பொது மேலாளர் அபே குருவில்லாவிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா இந்த மாற்றத்திற்கான காரணங்களை விளக்கியுள்ளார். மே மாதத்தின் பிற்பாதியில் இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் வெயில்  உயர்கிறது. மதிய நேரப் போட்டிகள் மட்டுமின்றி, இரவுப் போட்டிகளின் போது கூட நிலவும் அதீத வெப்பம் மற்றும் புழுக்கத்தால் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமின்றி இந்திய வீரர்களும், மைதானத்திற்கு வரும் ரசிகர்களும் கடுமையாக அவதிப்படுகின்றனர்.

ஐபிஎல்

மே 15-ஆம் தேதிக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்குகிறது. இது ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான இறுதிப் போட்டிகள் மற்றும் பிளே-ஆஃப் ஆட்டங்களைப் பாதிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையைத் தற்போதைய 74 ஆட்டங்களில் இருந்து 94 ஆட்டங்களாக உயர்த்த வேண்டும் என்று சில தரப்புகளில் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், இப்போதைக்கு ஆட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் காலண்டர் மற்றும் பிற நாடுகளின் இருதரப்புத் தொடர்களைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளதால், ஐபிஎல் தொடருக்கான 2 மாத கால அவகாசத்தை நீட்டிப்பது சாத்தியமில்லை என்றும், 74 போட்டிகள் என்ற தற்போதைய நடைமுறையே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் முன்கூட்டியே தொடங்கப்பட வேண்டும் என்றால், அதற்கு ஏதுவாக இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களான ரஞ்சி கோப்பை உள்ளிட்டவற்றை மார்ச் முதல் வாரத்திற்குள்ளாகவே நடத்தி முடிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. பிசிசிஐ-யின் இந்த புதிய ஆலோசனையானது வெயிலில் வாடும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் பெரும் நிம்மதியைத் தரும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.