திடீர் திருப்பம்... சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் முன்னாள் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கைது!

 
சபரிமலை தேவஸ்தான தலைவர் பிரசாந்த்

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில், திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவர் பிரசாந்தை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு இவ்வழக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் கைது நடவடிக்கை இதுவாகும்.

கடந்த 2025-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த போது, உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியானது: இச்சம்பவம் தொடர்பாக தேவஸ்தான முன்னாள் தலைவர்கள் என்.வாசு, பத்மகுமார் மற்றும் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போற்றி உட்பட 13-க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் தேவஸ்தான தலைவராக இருந்த பிரசாந்த் மீதும் தொடர் குற்றச்சாட்டுகள் நிலவி வந்த நிலையில், நேற்று திருவனந்தபுரம் கரகுளத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்துச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் அவரைக் கைது செய்தனர்.

சபரிமலை

சபரிமலை கோவில் துவார பாலகர் சிலைகளுக்குத் தங்கத் தகடுகள் பதிக்கும் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகளின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் முன்அனுமதி எதுவுமின்றி தங்கத் தகடுகளைச் சென்னைக்குக் கொண்டு செல்ல அனுமதி அளித்ததாகவும், அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போற்றியுடன் இணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகவும் பிரசாந்த் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கைது குறித்துப் பேசிய பிரசாந்த், "எனக்கு இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லை; என் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வேன். 2025-ல் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல் தங்கம் எடுத்துச் செல்லப்பட்டது மட்டுமே நடைமுறைக் குறைபாடே தவிர, கோவிலில் தங்கம் எதுவும் காணாமல் போகவில்லை அல்லது இழக்கப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.