திடீர் திருப்பம்... மயிலாப்பூர் இளைஞர் கொலை வழக்கில் 3 கல்லூரி மாணவர்கள் கைது - பரபரப்பு வாக்குமூலம்!
சென்னை மயிலாப்பூரில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய 3 கல்லூரி மாணவர்களைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் (20) என்பவர், டிப்ளமோ படிப்பை முடித்து ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவர் முன்னதாக மயிலாப்பூர் பகுதியில் வசித்து வந்தவர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூர் வீரபத்திரன் தெருவில் உள்ள தனது நண்பர் சபரியைப் பார்க்க சத்தியசீலன் வந்துள்ளார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியது.

இக்கொலை வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த 17 வயதுடைய முதலாம் ஆண்டு கல்லூரி படித்து வந்த 3 மாணவர்களைப் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், சத்தியசீலனும் கைது செய்யப்பட்ட 3 மாணவர்களும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். சத்தியசீலன் பள்ளி காலத்தில் அவர்களுக்குச் சீனியராக இருந்துள்ளார்.
பள்ளியில் படிக்கும் போதிருந்தே அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், சீனியர் என்ற முறையில் சத்தியசீலன் அவர்களை அடிக்கடி அடித்து உதைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஊரை விட்டு வேளச்சேரிக்குச் சென்ற பிறகும், மயிலாப்பூருக்கு வரும் போதெல்லாம் மீண்டும் வந்து தகராறில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த அந்த3 மாணவர்களும் திட்டம் தீட்டிச் சத்தியசீலனை வெட்டிக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இச்சம்பவம் மயிலாப்பூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
