திடீர் ட்விஸ்ட்... ‘இனி எப்போதும் சீமானுக்கு ஆதரவாகவே நிற்பேன்’ நடிகை விஜயலட்சுமி அறிவிப்பு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வந்த சட்டப் போராட்டங்களும் காவல் துறை வழக்குகளும் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், விஜயலட்சுமி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் காவல் துறை புகார்கள் பதிவாகி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் இருந்து வந்தன.

தொடர் சட்டப் போராட்டங்களால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்கள் மற்றும் ஆதரவின்மை பற்றிக் குறிப்பிட்டுள்ள விஜயலட்சுமி, இனி வரும் காலங்களில் சீமானுக்கு எதிரான கருத்துக்களைத் தவிர்த்துவிட்டு, அவருக்கு ஆதரவாகவே நிற்பேன் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த எதிர்பாராத திடீர் திருப்பம், சீமான் மீதான வழக்குகளின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த விவகாரம்குறித்து நாம் தமிழர் கட்சித் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான எதிர்வினையும் வெளியிடப்படவில்லை.
