திடீர் ட்விஸ்ட்... கள்ளக்காதலனுடன் ஓடிப்போன மனைவியை வாக்குச்சாவடியில் மடக்கிப்பிடித்த கணவன்!
தேர்தல் களம் எப்போதுமே சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சமில்லாதது. ஆனால், மேற்கு வங்க மாநிலம் தாராபாரி கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம், சினிமா பட பாணியில் அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் ஓடிப்போன தனது மனைவி, எப்படியும் ஓட்டுப் போடத் தனது கிராமத்திற்கு வருவார் என்று கணவர் சரியாகக் கணக்குப் போட்டுள்ளார். அதன்படி, அந்தப் பெண்ணைப் பிடிக்க வாக்குச்சாவடி அருகிலேயே சுமார் 5 மணிநேரம் விடாமல் காத்திருந்துள்ளார்.

கணவர் எதிர்பார்த்தபடியே, அந்தப் பெண் தனது புதிய கணவருடன் வாக்களிக்க வந்தபோது, பழைய கணவர் குறுக்கே புகுந்து வழிமறித்தார். "எனது மனைவியாக உனக்கு இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை; ஆனால் வாக்காளர் அட்டையில் மட்டும் எப்படிப் புதிய கணவர் பெயரைச் சேர்க்கலாம்?" என்று கேட்டு வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் மல்லுக்கட்டினார். "எனது பெயரை அவரது வாக்காளர் அட்டையிலிருந்து நீக்கும் வரை அவரை ஓட்டுப் போட விடமாட்டேன்" என்று பிடிவாதம் பிடித்ததால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்களிக்க வந்த மக்கள் கூட்டத்திற்கு இடையே இந்த குடும்பத் தகராறு முற்றியதால், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் தேர்தல் அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டனர். "வாக்காளர் அட்டையில் உள்ள பெயர்ப் பிழைகள் குறித்துத் தேர்தல் முடிவுக்குப் பின் உரிய முறையில் விண்ணப்பிக்கலாம், இப்போது ஓட்டுப் போடத் தடை விதிக்க முடியாது" என்று கணவருக்கு அறிவுரை கூறினர்.

அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் தனது வாக்கினைப் பதிவு செய்தார். வாக்குப்பதிவு முடிந்ததும், மேற்கொண்டு அங்குச் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இரு தரப்பினரையும் அதிகாரிகள் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மனைவியைப் பிடிக்கக் கணவன் வாக்குச்சாவடியில் பல மணிநேரம் தவம் கிடந்த இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
