பிளஸ் 2 மாணவன் கொலையில் திடீர் திருப்பம்... 17 வயது பள்ளி மாணவி கைது!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காணாமல் போன 17 வயது பிளஸ் 2 மாணவர் அபிராம், சாக்குப்பையில் கட்டப்பட்ட நிலையில் அடர்ந்த புதர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாங்கப்பாறையைச் சேர்ந்த அபிராம் (17), கடந்த நவம்பர் 1-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் பெற்றோர் ஸ்ரீகாரியம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். சைபர் கிரைம் உதவியுடன் அபிராமின் செல்போன் சிக்னலைக் கண்காணித்தபோது, பாங்கப்பாறையில் உள்ள அடர்ந்த புதர் பகுதியில் சிக்னல் காட்டியுள்ளது. அங்குச் சென்று பார்த்தபோதே, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்குப்பையினுள் அபிராமின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

போலீசாரின் தீவிர விசாரணையில், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 17 வயது சிறுமியுடன் அபிராம் பழகி வந்துள்ளார். இது அந்த சிறுமியைக் காதலிக்கும் இளைஞருக்குப் பிடிக்கவில்லை. சம்பவத்தன்று அந்தச் சிறுமியைப் பயன்படுத்தியே அபிராமை போனில் அழைத்து வரவழைத்துள்ளனர். அங்குச் சென்ற அபிராமிடம் வாக்குவாதம் முற்றி, அவரை கீழே தள்ளிக் கழுத்தில் மிதித்துக் கொடூரமாகக் கொலை செய்து சாக்குப்பையில் கட்டி வீசியுள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாக 17 வயது சிறுமி, அவரது காதலன் உட்பட 3 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபிராமின் நண்பர் ஒருவரைக் குறிவைத்துத் திட்டமிட்டுக் கொலை செய்ய முயன்ற போது, தவறுதலாக அபிராம் இதில் சிக்கிக் கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
