பெண் கொலையில் திடீர் திருப்பம்... கலெக்டர் ஆபீஸ் ஊழியர் நகைக்காக அடித்துக் கொன்றது அம்பலம்!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர், நகைக்காக இரும்பு ராடால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச் செய்துவிட்டு, காவல்துறையினருடனே சேர்ந்து கொண்டு தேடுதல் வேட்டையில் நாடகமாடிய தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத் தற்காலிக ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் வசித்து வந்த பெண்மணி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததுடன், அவரிடம் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வரும் அறிவுமணி என்பவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
அந்தப் பெண்ணைக் கொன்றுவிட்டு நகைகளைக் கொள்ளையடித்த அறிவுமணி, காவல்துறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, எவ்வித சந்தேகமும் வராதவாறு அவர்களுடன் சேர்ந்து கொண்டு குற்றவாளியைத் தேடுவது போல் மிகத் திறமையாக நாடகமாடியுள்ளார்.

காவல்துறையினர் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இந்த அதிர்ச்சித் தகவல் அம்பலமானது. இதனையடுத்து அறிவுமணியைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
