திடீர் திருப்பம்... "ஜெம் வீரமணி வழக்கை முடிக்கப் பார்த்ததே தவெக அரசுதான்" - சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டு!
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் சண்முகம், ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் தவெக மீது அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கை தவெக அரசுதான் தாமாக முன்வந்து வெளிக்கொண்டு வந்ததைப் போல ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், ஆனால் உண்மையில் இந்த வழக்கை முடிக்கத்தான் தவெக அரசு பார்த்ததாகவும் சண்முகம் குற்றம்சாட்டினார்.
கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி போக்சோ நீதிமன்றத்தில் தற்போதுள்ள தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், இந்த வழக்கை முடித்துக் கொள்வது தொடர்பான தொனி தான் இருந்ததாக அவர் தெரிவித்தார். தங்களது முயற்சியால் தான் வழக்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுவதற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை என்றார்.

ஜெம் வீரமணி வழக்கு தீவிரமடைந்ததற்கும், பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கும் உண்மையான காரணம் போக்சோ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி எடுத்த நடவடிக்கைகள்தான் என்று சண்முகம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
