திடீர் ட்விஸ்ட்.. தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் - செந்தில்பாலாஜி பெயர் இடம் பெற்றதால் பரபரப்பு!

 
தவெக

யூடியூபர் ஐபிடிஎஸ் திருநாவுக்கரசு சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் பணப் பேரப் பின்னணி மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் தொடர்புகள் குறித்த அதிர்ச்சியூட்டும் விபரங்களைக் காவல் துறை வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவைத் தொடர்பு கொண்டு கட்சி மாறச் சொல்லிப் பேரம் பேசிய வழக்கில், பேரத் தொகை எவ்வளவு மற்றும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்த முதற்கட்ட அறிக்கை காவல்துறை தரப்பிலிருந்து வெளியாகியுள்ளது.

காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த விவகாரத்தில் சாதாரண அரசியல் கட்சி மாற்றம் மட்டுமின்றி, சட்டமன்ற அரசியல் நகர்வுகளும் திட்டமிடப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தவெக எம்.எல்.ஏ இளையராஜாவை வேறு அணிக்கு மாற்றுவதற்காகச் சுமார் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகக் காவல் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசு

தமிழகச் சட்டமன்றச் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் திட்டமிடப்பட்டு வருவதாகவும், அதற்கு ஆதரவளிக்கக் கோரியே ஐபிடிஎஸ் திருநாவுக்கரசு, எம்.எல்.ஏ இளையராஜாவிடம் இந்த கோடிக்கணக்கான பேரத்தை நடத்தியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் யூடியூபரையும் தாண்டி, முக்கிய அரசியல் புள்ளிகளின் ஆட்கள் கைது செய்யப்பட்டுள்ளது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய சென்னை திருவல்லிக்கேணி போலீசார், யூடியூபர் திருநாவுக்கரசுடன் சேர்த்து மேலும் இருவரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மற்ற இருவர், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கருதப்படும் நரேஷ் மற்றும் தியாகராஜன் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த ஒட்டுமொத்தப் பேர விவகாரத்தின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பெயரும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.