திடீரென அரசு பேருந்தின் ஓட்டுநருக்கு வலிப்பு... தாறுமாறாய் ஓடி மோதியதில் ஓட்டுநரும், பாதசாரியும் பலி!
கோவை குனியமுத்தூர் அருகே ஓடும் அரசுப் பேருந்தின் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பேருந்து ஓட்டுநர் என இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திடீர் வலிப்பு: கோவையில் இருந்து இயக்கப்பட்ட 66-ஆம் எண் அரசுப் பேருந்தை மார்ட்டின் என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார். குனியமுத்தூர் சாலை, சுண்ணாம்புக் கால்வாய் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் மார்ட்டினுக்கு திடீரென வலிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையில் தாறுமாறாக ஓடியதுடன் சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீதும் மோதியது.

அப்பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு நின்றிருந்த குனியமுத்தூரைச் சேர்ந்த நூர் முகமது (ஆட்டோ ஓட்டுநர்) என்பவர் மீது பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பேருந்து ஓட்டுநர் மார்ட்டினும் உயிரிழந்தார். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பெண் உள்பட 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து தாறுமாறாக ஓடியபோது, பேருந்தில் இருந்த நடத்துநர் பரமேஸ்வரன் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டுத் துரிதமாகப் பேருந்தை நிறுத்தினார். இதனால் பேருந்து அருகில் இருந்த கால்வாயில் கவிழாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் அனைவரும் பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பினர்.

இச்சம்பவம் குறித்து கரும்புக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்ப விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுப் பரபரப்பு நிலவியது.
