ஜெட் வேகத்தில் எகிறும் சர்க்கரை விலை- “எத்தனால் காரணமில்லை..” - மத்திய அரசு விளக்கம்!

 
சர்க்கரை

கடந்த சில நாட்களாக சர்க்கரையின் சில்லறை விலை கிலோவுக்கு உயர்ந்து வரும் நிலையில், சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்காகக் கரும்புத் சாறு திருப்பி விடப்பட்டதே காரணம் என்ற தகவலை மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

கரும்பு விளைச்சல் பகுதியில் ஏற்பட்ட போதிய மழையின்மை, கரும்புப் பயிர்களில் ஏற்பட்ட நோய்த் தாக்குதல், எதிர்வரும் பண்டிகைக் காலத் தேவை அதிகரிப்பு மற்றும் சர்வதேச அளவில் சர்க்கரைக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு ஆகியவையே உள்நாட்டுச் சந்தையில் விலை உயர்விற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலை ஏற்றுமதி

எத்தனால் உற்பத்திக்காகத் திருப்பி விடப்படும் சர்க்கரையின் அளவு கடந்த ஆண்டுகளை விடக் குறைந்துள்ளது என்றும், தற்போது எத்தனால் உற்பத்தியில் பெரும்பாலான பங்கு மக்காச்சோளம் போன்ற தானியங்களிலிருந்தே பெறப்படுகிறது என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. உற்பத்தி ஓரளவு குறைந்திருந்த போதிலும், அக்டோபர் மாதம் புதிய கரும்பு அரவை பருவம் தொடங்கும் வரை உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு சர்க்கரை இருப்பு நாட்டில் உள்ளது.

பண்டிகைக் காலத்தில் விலையைக் கட்டுப்படுத்த 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கள்ளச்சந்தை மற்றும் செயற்கைத் தட்டுப்பாட்டைத் தடுக்க, சர்க்கரை வியாபாரிகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை 400 டன்கள் மட்டுமே கையிருப்பு வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை

செப்டம்பர் 1 முதல் சாக்லேட், குளிர்பானங்கள் மற்றும் இனிப்புத் தயாரிப்பு நிறுவனங்கள் போன்ற மொத்தப் பயன்பாட்டாளர்கள் 15 நாட்களுக்குத் தேவையான அளவை விட அதிகமாகச் சர்க்கரையைச் சேமித்து வைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.