3 உயிர்களை மகன் பறித்தும் சுஹைல் பெற்றோர் இன்ஸ்டாவுல பிஸி... கதறியழும் மாணவிகளின் பெற்றோர் - மினி கூப்பர் விபத்தின் துயரம்!

 
சுஹைல் மினி கூப்பர் கார் விபத்து

கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மினி கூப்பர் சொகுசு கார் விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுஹைல் சஜீவ் மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல்பாடு குறித்துப் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இக்குற்ற வழக்கில் தொடர்புடையவர்களுக்குச் சட்ட வரம்பிற்குட்பட்டுத் தகுந்த கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முறையான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிப் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஜோலி ஜோசப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேரளா சொகுசு கார் விபத்து

நள்ளிரவு நேரத்தில் ஸ்கூட்டரில் மூன்று பேர் பயணம் செய்ததே விபத்திற்குக் காரணம் என்று கூறி சிலர் பாதிக்கப்பட்ட தரப்பினரைக் விமர்சித்து வந்தாலும், போதையின் உச்சத்தில் கவலையற்ற மனப்பான்மையுடன் அதிவேகமாக மினி கூப்பர் காரை இயக்கி மூன்று உயிர்கள் பறிபோக காரணமான சுஹைல்தான் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி என்றும், அவர் மீது கடுமையான கோபமும் விமர்சனங்களும் எழுந்துள்ளதாகவும் ஜோலி ஜோசப் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் உள்ளூர் மக்கள் சுஹைல் சஜீவைத் தாக்கிய சம்பவத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாகப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் முன்வைக்கும் மூன்று முக்கியக் கோரிக்கைகளைத் தனது பதிவில் ஜோலி ஜோசப் பட்டியலிட்டுள்ளார்:

போதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டி அப்பாவி இளைஞர்களின் உயிரைப் பறித்த அந்த ஆணவக்கார இளைஞர் சுஹைலுக்குச் சட்டத்தின் படி உரிய கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டவர் வசதியான குடும்பத்தினர், உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கும் உறவினர்களுக்கும் போதிய நிதியுதவி வழங்க முன்வர வேண்டும். தங்கள் மகன் செய்த மிகப்பெரிய தவறுக்கான தார்மீகப் பரிகாரமாக இது அமைய வேண்டும். விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தில் விதிகளுக்கு மாறாக மூன்று பேர் பயணித்ததால், காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து எந்தவிதமான இழப்பீடும் கிடைக்க வாய்ப்பில்லாத சூழலில், இந்தக் குடும்பங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த உதவி அவசியமாகிறது.

கோபிகா மினி விபத்து கார்

செல்வந்தப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே அதிவேகமாக இயங்கக்கூடிய கார்களை வாங்கிக் கொடுத்து சுதந்திரமாக விடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விபத்தில் மூன்று பதின்வயதினர் உயிரிழந்ததற்குச் குற்றம் சாட்டப்பட்ட சுஹைலின் பெற்றோருக்கும் மறைமுகமாகப் பங்கு உண்டு என்று நம்புபவர்கள் பலர் உள்ளனர்.

சுஹைலின் பெற்றோர் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக தீவிரமாகச் செயல்பட்டு வருவதை அறிந்துகொள்ள முடிகிறது. எனவே, பெரும் மன உளைச்சலில் இருக்கும் பொதுமக்களிடமும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டாரிடமும் அவர்கள் நேரில் சென்று வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டால், பொதுமக்கள் மத்தியில் அவர்கள் மீது வெளிப்படுத்தப்படும் கடுமையான விமர்சனங்களையும் சாபங்களையும் அது ஓரளவு குறைக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.