தற்கொலை முயற்சி... அதிமுக தலைமைக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியை அதிமுகவிற்கு ஒதுக்கிய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பாஜக நிர்வாகிகள் சாலை மறியல் மற்றும் தற்கொலை முயற்சி போன்ற தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டதால் திண்டுக்கல் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.
பழனி தொகுதியில் கடந்த பல ஆண்டுகளாகப் பாஜகவினர் தீவிரமாகக் களப்பணியாற்றி வருவதாகவும், மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருவதால் அத்தொகுதியில் பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகவும் அக்கட்சியினர் நம்புகின்றனர்.

கொடைக்கானல் மற்றும் பழனி பகுதிகளை உள்ளடக்கிய மேல் மலை ஒன்றிய பாஜக நிர்வாகிகள், தங்கள் கட்சிக்கு அத்தொகுதியை ஒதுக்க வேண்டும் எனத் தேங்காய் உடைத்து வேண்டுதல்கள் வைத்தனர். பழனி தொகுதி அதிமுகவிற்கே மீண்டும் ஒதுக்கப்பட்ட தகவல் வெளியானதும், ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். பழனி பாஜக அலுவலகத்தைப் பெரும் திரளான தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.
அலுவலகத்தின் மாடி மீது ஏறி நின்ற தொண்டர் ஒருவர், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்ததால் அங்குக் கூடியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தங்களது கடின உழைப்பிற்கு மதிப்பளிக்காமல் தொகுதி கைநழுவிப் போனதைக் கண்டித்துப் பிரதான சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுப் பரபரப்பு நிலவியது.

கூட்டணிக்குள் விரிசல்?
அதிமுக தலைமையின் இந்த முடிவால் பாஜக அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. "நாங்கள் பல வருடங்களாகச் செய்த பணிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடுதான் அங்கீகாரமாக இருந்திருக்கும்; ஆனால் இப்போது ஏமாற்றம் கிடைத்துள்ளது" என அவர்கள் ஆவேசமாகத் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தை பாஜக மேலிடம் எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
