பெண் தற்கொலை வழக்கு... தலைமறைவாக இருந்த தவெக பிரமுகர் சென்னையில் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரது மனைவி 33 வயதான அனிஷா தனியார் பள்ளியில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 12-ஆம் தேதி தனது கணவருக்கு வீடியோ மூலம் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அனுப்பிவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். “இது நான் அவன் மேல விருப்பப்பட்டு செய்தது கிடையாது; என்னை அவன் வாழ விடமாட்டான்” எனத் தனது கணவரிடம் வீடியோவில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். பெண்ணின் இந்தத் திடீர் தற்கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்ெகாண்டனர். விசாரணையில் அனிஷா தனது வீடியோவில் குறிப்பிட்ட அந்த நபர் தவெக பிரமுகர் சங்கர் என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தலைமறைவான அவரைப் பிடிக்கக் காவல் துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கப்பட்டது. சென்னை பல்லாவரத்தில் உள்ள நண்பரின் வீட்டில் ஒளிந்திருந்த தவெக பிரமுகர் சங்கரைத் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சங்கர் பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டுப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். பெண் தற்கொலைக்குக் காரணமான அரசியல் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை வழக்கின் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்துக் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
