கோதாவரி ஆற்றில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!
ஆந்திரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கோதாவரி ஆற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், துப்பாக்கிச் சூடு பயிற்சியாளர் ஒருவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் துறை உதவிப் பொறியாளர் தில்லப்புடி நூக்கராஜு, அவரது மனைவி மீனா மற்றும் மகள் சௌஜன்யா ஆகிய மூவரும் ராஜமுந்திரி அருகே கோதாவரி ஆற்றில் குதித்து உயிரிழந்தனர்.

கடந்த ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் நடைபெற்ற இச்சம்பவத்தில், அவர்களுடன் ஆற்றில் குதித்த 10 வயது பேரன் மட்டும் மீனவர்களால் உயிருடன் மீட்கப்பட்டான். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட தற்கொலைக் குறிப்பில், துப்பாக்கிச் சூடு பயிற்சியாளரான ஷேக் சாதிக் கான் என்பவர் தங்களை நிதி ரீதியாகவும் மன ரீதியாகவும் அச்சுறுத்தி, தற்கொலைக்குத் தூண்டியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஜூலை மாதம் உயிரிழந்த சௌஜன்யாவின் கணவர் ஜகதீஷ் ரெட்டியின் மரணத்திலும் சாதிக் கானுக்குத் தொடர்பு இருக்கலாம் என உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சாதிக் கான் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், கொலை, மிரட்டல், பணம் பறிப்பு மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செல்போன் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்த்துப் தலைமறைவாக இருந்த சாதிக் கானைப் பிடிக்க 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 5 மாநிலங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் இருந்த அவரைப் போலீசார் கைது செய்து ஆந்திராவிற்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட சாதிக் கானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.இவ்வழக்கின் பின்னணியில் உள்ள தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இதனை சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்ற வேண்டும் என முன்னாள் எம்பி விஜயசாய் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
