வீட்டை விட்டு வெளியே வராதீங்க... இன்று முதல் கத்திரி வெயில் தொடக்கம்... 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும்... !
தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்கியதில் இருந்து மக்கள் கடும் வெயிலால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். தினசரி பல நகரங்களில் 104 டிகிரி அளவிற்கு மேல் வெப்பநிலை பதிவாகி மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த சூழ்நிலையில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் அதிரடியாகத் தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட 5 டிகிரி வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும் இரவு நேரங்களில் கடும் புழுக்கமும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜோதிட சாஸ்திரப்படி சூரிய பகவான் கிருத்திகை நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கும் காலமே கத்திரி வெயில் என்று கூறப்படுகிறது. இந்த சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம் மே 28 ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு நீடிக்க உள்ளது. இந்த நாட்களில் சூரியன் தனது தேரை மிகவும் மெதுவாக செலுத்துவதால் வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நண்பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய நீர்ச்சத்து மிகுந்த இயற்கை பானங்களை அதிகம் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.

வெப்பத்தின் தாக்கம் ஒருபுறம் அதிகரித்து வந்தாலும் சில மாவட்டங்களில் ஆறுதலாக மழையும் பெய்ய உள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் மே 9 ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் வெயிலின் கோரத் தாக்கத்தில் இருந்து மக்களுக்கு ஒரு சிறிய அளவிலான ஆறுதல் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
