ஐபிஎல் தொடரில் சுனில் நரேன் புதிய சாதனை... ரசிகர்கள் உற்சாகம்!

 
சுனில் நரேன்
 

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் போட்டியில் டெல்லி அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரிஷப் பண்ட், பிரிதிவி ஷா உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் எடுத்தார்.

சுனில் நரேன்

கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 154 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு பிலிப் சால்ட் அதிரடியாக 68 (33), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33, வெங்கடேஷ் ஐயர் 26 ரன்கள் எடுத்தனர். அதனால் 16.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய கொல்கத்தா எளிதாக வெற்றி பெற்றது. 6-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் செல்தற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

 

இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல இந்த போட்டியில் சுனில் நரேன் வழக்கம் போல 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து அக்சர் படேல் விக்கெட்டை எடுத்தார். இதையும் சேர்த்து கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை அவர் மொத்தம் 69 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற லசித் மலிங்காவின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

சுனில் நரேன்

ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் விவரம்,

சுனில் நரேன் : 69* (ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா)
லசித் மலிங்கா : 68 (வான்கடே, மும்பை)
அமித் மிஸ்ரா : 58 (பெரோசா கோட்லா, டெல்லி)
Narine

அந்த வகையில் தனித்துவ சாதனை படைத்த அவர் இந்த வருடம் பேட்டிங்கில் 9 போட்டிகளில் 372 ரன்களை எடுத்துள்ளார். அதனால் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 8வது இடத்தில் உள்ள அவர் இம்முறை பேட்ஸ்மேனாகவும் கொல்கத்தாவின் வெற்றியில் சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web