பசிபிக் பெருங்கடலில் உச்சம் தொட்ட வெப்பநிலை - சூப்பர் எல் நினோவால் உலக நாடுகளுக்கு தீவிர எச்சரிக்கை!

 
பசிபிக் பெருங்கடல் வெப்பநிலை சூப்பர் எல் நினோ

பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல் நினோ நிகழ்வின் தாக்கம் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்குக் கடல் மேற்பரப்பு வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகளாவிய கடல் வெப்பநிலையில் இது வரலாறு காணாத அதீத உயர்வாகும்.

கடந்த மாதம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியாக 29.70 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது. 1979-ஆம் ஆண்டு முதல் கடல் வெப்பநிலையை தினசரி அடிப்படையில் கண்காணித்து வரும் கோப்பர்நிக்கஸ் அமைப்பு இதுவரை பதிவு செய்ததிலேயே இதுவே மிக அதிகபட்ச அளவாகும்.

எல் நினோ

இதற்கு முன்பு கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 29.09 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. தற்போது அந்தச் சாதனையும் முறியடிக்கப்பட்டு புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் இயல்பை மீறிய வெப்பநிலை உயர்வு 'எல் நினோ' என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு 'சூப்பர் எல் நினோ' உருவெடுத்துள்ளதே உலகெங்கிலும் உள்ள பெருங்கடல்களின் வெப்பநிலையில் இந்த அதீத மாற்றத்திற்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

எல் நினோ

காலநிலை மாற்றத்தின் தொடர்ச்சியாகப் கடந்த பல ஆண்டுகளாகவே கடல்களின் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சூப்பர் எல் நினோ நிலை உலகெங்கிலும் உள்ள பல பகுதிகளில் கடும் வறட்சி மற்றும் வெப்பநிலை உயர்வை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உலகின் பிற பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் தீவிரப் புயல்கள் உருவாவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.