'சூப்பர் எல் நினோ' எச்சரிக்கை... பருவமழை குறைந்து வறட்சியை நோக்கி நகரும் வட இந்தியா!
உலகளாவிய காலநிலை மாற்றத்தின் விளைவாக, இந்த ஆண்டு இந்தியப் பருவமழைப் பொழிவில் மிகப்பெரிய தலைகீழ் மாற்றங்கள் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள 'சூப்பர் எல் நினோ' தாக்கத்தின் காரணமாக, வட மற்றும் மத்திய இந்தியப் பகுதிகள் கடுமையான வறட்சியைச் சந்திக்க நேரிடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிற்குப் பொழியும் தென்மேற்குப் பருவமழைதான் நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் முக்கியப் பங்களிப்பை வழங்குகிறது. ஆனால், இந்த ஆண்டு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை, அதன் வழக்கமான சராசரி அளவை விட தற்பொழுது 2°C-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த அதீத வெப்பநிலையே 'சூப்பர் எல் நினோ' என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வின் காரணமாக, இந்தியாவில் வழக்கமாகப் பெய்ய வேண்டிய பருவமழையின் சுழற்சி முற்றிலும் மாறுபடுகிறது. இதன் நேரடிப் பாதிப்பை மத்திய மற்றும் வட இந்திய மாநிலங்கள் எதிர்கொள்ளவிருக்கின்றன.
மழைப்பொழிவு பெருமளவு குறைய வாய்ப்புள்ளதால் வட இந்தியாவில் ஜூன் - செப்டம்பர் கோடைக் கால பருவமழை மத்திய மற்றும் வட மாநிலங்களில் மிக மோசமாகக் குறையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், இந்தியாவின் முதன்மைப் பயிர் விளைச்சல் பகுதிகளான வட மாநிலங்களில் விவசாயத் தொழில் மற்றும் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

வட இந்தியா வறட்சியை நோக்கி நகரும் அதே வேளையில், தென் மாநிலங்களுக்கு இந்த எல் நினோ சற்று சாதகமான மற்றும் எச்சரிக்கையான சூழலை உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் தென் மாநிலங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட மிக அதிகமான மழை பொழிவதற்குக் கூடுதல் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. ஒரே காலகட்டத்தில் நாட்டின் ஒரு பகுதி கடுமையான வறட்சியையும், மற்றொரு பகுதி அதிக மழையையும் எதிர்கொள்ளவிருக்கும் இந்த விசித்திரமான காலநிலை மாற்றம், மத்திய மற்றும் மாநில அரசுகள் இப்போதிருந்தே நீர் மேலாண்மை மற்றும் வறட்சித் தடுப்புத் திட்டங்களை முடுக்கிவிட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.
