நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள்... முதல்வர், கமல், விஜய், அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்த நாளைக் கொண்டாடி வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் தன்னுடைய நடிப்பால் - ஸ்டைலால் ரசிகர்களாக்கிக் கொண்ட அருமை நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! திரையுலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வரும் தாங்கள், எப்போதும் அமைதியோடும் மனமகிழ்ச்சியோடும் திகழ்ந்து மக்களை மகிழ்வித்திட விழைகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், நடிகர் ரஜினிகாந்துக்கு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனும் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க!” எனப் பதிவிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், "நடிகர் நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று 75-ஆம் பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டுகள் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
