ரசிகர்கள் ஏமாற்றம்... ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் சூர்யகுமார், சுப்மன் கில்லுக்கு இடமில்லை!
ஜப்பானில் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரை 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் உத்தேசப் பட்டியலை, இந்திய கிரிக்கெட் வாரியம் தற்போது இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது. மொத்தம் 30 வீரர்கள் அங்கம் வகிக்கும் இந்த உத்தேசப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஏனெனில் இந்த 30 பேர் கொண்ட உத்தேசப் பட்டியலில் இந்தியாவின் 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் கேப்டன் சுப்மன் கில் ஆகிய முன்னணி வீரர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. அதே நேரத்தில் 15 வயது இளம் அதிரடி ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்த உத்தேச அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் அதே காலகட்டத்தில், இந்திய அணி தனது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகள் நடக்கின்றன. இந்தத் தொடரில் இந்தியாவின் முதன்மை மற்றும் முன்னணி வீரர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளதால், அவர்களுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான அணியில் இடம் அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த உத்தேசப் பட்டியலில் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
