அண்ணாமலைக்கு ஆதரவு... பாஜகவில் இருந்து விலகினார் கோவை தெற்கு முன்னாள் தலைவர் வசந்தராஜன்!

 
அண்ணாமலை கோவை வசந்தராஜன் அண்ணாமலை கோவை வசந்தராஜன்

அண்ணாமலையின் புதிய அரசியல் பிரகடனம் வெளியான சில மணி நேரங்களிலேயே, பாஜகவின் கோவை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவரும், முக்கிய நிர்வாகியுமான கே.வசந்தராஜன் இன்று தனது கட்சிப் பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

பாஜகவில் இருந்து விலகியுள்ள கே.வசந்தராஜன், கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாஜவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக பாஜக சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணாமலையின் நேரடிப் பரிந்துரையின் பேரில் வேட்பாளராகக் களமிறங்கிப் போட்டியிட்டவர் கே.வசந்தராஜன். தேர்தல் களத்தில் மிகத் தீவிரமாகப் பணியாற்றி, கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்த இவர் தற்போது விலகியிருப்பது கோவை பாஜவிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை

அண்ணாமலை தனது புதிய கட்சியைத் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்து அசுர சாதனை படைத்துள்ள சூழலில், வசந்தராஜனின் இந்த முடிவு தற்செயலானது அல்ல என்று கூறப்படுகிறது:

அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்த காலம் முதலே அவருடன் மிக நெருக்கமான நட்புடனும், அவரது அரசியல் கொள்கைகளுக்குத் தீவிர ஆதரவாளராகவும் வசந்தராஜன் செயல்பட்டு வந்தார். எனவே, பாஜகவிலிருந்து விலகியுள்ள அவர், மிக விரைவில் அண்ணாமலையின் 'இது நம்ம இயக்கம்' கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து, கோவை மற்றும் மேற்கு மாவட்டங்களில் புதிய கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கியப் பொறுப்பை ஏற்பார் என அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் மிக பலமாகப் பேசப்பட்டு வருகிறது.