“விருப்பமிருந்தால் ஆதரவு தாங்க...” கூட்டணி கட்சிகளுக்கு பச்சைக்கொடி காட்டிய ஸ்டாலின்... விஜய்யின் முதல்வர் கனவுப் பலிக்குமா?!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் குழப்பம், தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கைகளில் வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
நேற்று மாலை தமிழகப் பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்த விஜய், தனது கட்சி சார்பில் 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலை வழங்கினார். ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான குறைந்தபட்சப் பெரும்பான்மையான 118 இடங்களை நிரூபித்தால் மட்டுமே அழைக்க முடியும் என ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

இன்று மீண்டும் ஆளுநரைச் சந்தித்த பிறகு, ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்று வெளியானது: "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைக் காட்டவில்லை; அதனால் அவரை ஆட்சி அமைக்க அழைக்க முடியவில்லை."
எந்தத் திமுக-வை எதிர்த்து விஜய் களம் இறங்கினாரோ, தற்போது அதே திமுக-வின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே அவரால் முதல்வர் நாற்காலியில் அமர முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த அரசியல் முதிர்ச்சியுடன் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்:
"தமிழகத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக தடையாக இருக்காது. ஒரு அரசியலமைப்பு நெருக்கடியோ அல்லது மற்றொரு பொதுத் தேர்தலோ வருவதை திமுக விரும்பவில்லை" என அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

தனது கூட்டணிக் கட்சிகளிடம், "உங்களுக்கு விருப்பமிருந்தால் (தவெக-விற்கு ஆதரவு அளிக்க) செல்லுங்கள்" என்று ஸ்டாலின் கூறிவிட்டதாகத் தெரிகிறது. காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள போதிலும், விசிக உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சிகள் கொள்கை ரீதியான கூட்டணி என்பதால் திமுக-வை விட்டுப் பிரியத் தயங்குகின்றன. ஐயூஎம்எல் (IUML) போன்ற கட்சிகள் "திமுக தலைவர் சொல்வதையே நாங்கள் பின்பற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளன.
எனவே, ஸ்டாலின் அவர்கள் வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் "நீங்கள் தவெக-விற்கு ஆதரவு அளிக்கலாம்" என்று பச்சைக்கொடி காட்டினால் மட்டுமே, விஜய் தேவையான 118 என்ற எண்ணிக்கையை எட்ட முடியும். சுருக்கமாகச் சொன்னால், விஜய்யின் முதல்வர் கனவு தற்போது ஸ்டாலின் எடுக்கும் முடிவில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது.
