மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜி வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி!
திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி, தன் கண் சிகிச்சைக்காக 3 வாரங்களுக்கு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கண் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி அபிஷேக் பானர்ஜி தாக்கல் செய்த மனுவைக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 5 அன்று தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி மற்றும் மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. "சிகிச்சைக்கான மருத்துவமனையைத் தேர்ந்தெடுப்பதும் வெளிநாடு செல்வதும் தனிநபரின் அடிப்படை உரிமையாகும்" எனத் தெரிவித்த நீதிபதிகள், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, 3 வாரங்கள் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தனர்.
அபிஷேக் பானர்ஜி தனது பயணத்திட்டம், தங்கும் இடம், சிகிச்சை பெறவுள்ள மருத்துவமனை மற்றும் விமான பயண விவரங்களைப் புலனாய்வு அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும். தனது ராஜதந்திர கடவுச்சீட்டில் மட்டுமே அவர் பயணம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
