நீதிமன்ற விசாரணைகளை சமூக வலைதளங்களில் பதிவிட உச்சநீதிமன்றம் தடை!
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் காணொளிக்காட்சி வாயிலாக நடைபெறும் நேரடி நீதிமன்ற விசாரணைகளின் காணொளி மற்றும் ஒலிப்பதிவுகளை உரிய அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பதிவிடவும் பகிரவும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சமீபகாலமாக நேரடி நீதிமன்ற விசாரணைகளின் போது நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பேசும் வீடியோ துண்டுகள், மீம்கள் மற்றும் தவறான தலைப்புகளுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது அதிகரித்து வருகிறது. யூடியூப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில், நீதிமன்றத்தின் முன்அனுமதியின்றி எந்தவொரு வீடியோ அல்லது ஆடியோ பதிவுகளையும் வெளியிடுவதற்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற விசாரணைகளின் போது தவறான புரிதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், நீதித்துறையின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதிபதிகள்-வழக்கறிஞர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த இடைக்கால உத்தரவை மீறிச் செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கைகள் பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நீதிமன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுபவர்கள் அல்லது பரப்புபவர்கள் மீது 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கு' பாயும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிகளை மீறும் கணக்குகளை முடக்கவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
