குழந்தைகளுக்கும் இணையம் அடிப்படை உரிமை: உச்சநீதிமன்றம்
குழந்தைகளும் இணையத்தைப் பயன்படுத்துவது அடிப்படை உரிமை என்றும், வயது அடிப்படையில் அவர்களுக்கு முழுமையான தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவுவதைத் தடுக்கக் கோரிய மனுக்களை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு மற்றும் 19(1)(ஏ) பிரிவின்படி, குழந்தைகளுக்கும் இணையத்தைப் பயன்படுத்தும் உரிமை இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இணையப் பயன்பாட்டைத் தடை செய்வதற்குப் பதிலாக, பெற்றோரின் கண்காணிப்பை அதிகரித்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், அத்தகைய உள்ளடக்கங்களின் இணைய முகவரிகள் மற்றும் டிஜிட்டல் அடையாளங்களைக் கொண்ட தேசிய தரவுத்தளத்தை உருவாக்கவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர்.
