இணைய , மெட்ரோ, ரயில் சேவைகளுக்கு தடை கூடாது...டெல்லி போராட்டம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லியில் போராட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவுகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, ஒன்றிய உள்துறைச் செயலாளர், டெல்லி காவல் ஆணையர் மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் கழகத் தலைவர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்ட நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாகப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது, ரயில் சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது மற்றும் போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் காவலில் எடுக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், முந்தைய உத்தரவுகள் ஏன் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதை விளக்கி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
அமைதியாகக் கூடும் மக்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்யக் கூடாது என்றும், சட்டத்துக்கு உட்பட்டு பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். மெட்ரோ ரயில் மற்றும் ரயில் சேவைகள் வழக்கம்போல் செயல்படவும், இணையச் சேவைகள் தடையின்றித் தொடரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

போராட்டத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் பொதுமக்களுக்குத் தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தாத வகையில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விளக்கங்களையும், நீதிமன்ற உத்தரவுகள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டன என்பதையும் ஆய்வு செய்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
