காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவுக்கு விவாகரத்து வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!

 
kashmir

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சரான ஓமர் அப்துல்லா மற்றும் அவரது மனைவி பாயல் அப்துல்லா இடையேயான திருமண வாழ்க்கை பல ஆண்டுகளாகச் சிக்கலில் இருந்து வந்தது. இருவரும் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருந்தனர். நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த இந்த விவாகரத்து வழக்கில் தற்போது முக்கியத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இரு தரப்பிலும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாகத் தில்லி உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்ததை அடுத்து, ஓமர் அப்துல்லா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கு விசாரணையின் போது இரு தரப்பினரும் சுமுகமாகப் பிரிந்து செல்லச் சம்மதம் தெரிவித்துள்ளதாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருவரும் தங்களது சுதந்திரத்தை ஏற்க முடிவு செய்து விட்டதாகவும், அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.தனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு விவாகரத்து வழக்கை முடித்து வைத்தது.

கடந்த 1994-ஆம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி ஓமர் அப்துல்லா மற்றும் பாயல் அப்துல்லா ஆகிய இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாக 17 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். நீண்ட காலமாக நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவைப் பயன்படுத்தி விவாகரத்து பெறப்பட்டுள்ளது. பல வருடங்களாக நீடித்து வந்த இந்த விவாகரத்து விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.