நேதாஜி அஸ்தியை இந்தியா கொண்டு வரக் கோரி மகள் வழக்கு - மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

 
நேதாஜி அஸ்தி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை இந்தியா கொண்டு வரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேதாஜியின் மகள் அனிதா போஸ் ஃபாஃப், ஜப்பானில் உள்ள நேதாஜியின் அஸ்தியை இந்தியாவிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

1945-ல் நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது அஸ்தி டோக்கியோவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ரெங்கோஜி' ஆலயத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இம்மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அனிதா போஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இது குறித்து மத்திய அரசு தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேதாஜியின் அஸ்தியைக் கொண்டு வந்து அவரது தாய்நாட்டின் மண்ணில் மரியாதை செலுத்த வேண்டும் என அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் நீண்டகாலமாகக் கோரி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.