தவெக MLA வுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்; தேர்தல் ஆவணங்களைப் பாதுகாக்க உத்தரவு!

 
திருப்பத்தூர் தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் 83,374 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம், வெறும் 1 வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாகத் தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

வாக்கு எண்ணிக்கையின் போது தபால் வாக்குகள் மற்றும் செல்லாததாக அறிவிக்கப்பட்ட வாக்குகளைச் சரிபார்ப்பதில் பல்வேறு விதிமீறல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெரியகருப்பனின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கே.ஆர்.பெரியகருப்பன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

பெரிய கருப்பன்

அப்போது திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முடிவு அறிவிக்கப்பட்டதால், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆவணங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இதுகுறித்துத் தவெக எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

வழக்கு விசாரணை முடியும் வரை திருப்பத்தூர் தொகுதியின் வாக்குப்பதிவு எந்திரங்கள், தபால் வாக்குகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்துத் தேர்தல் ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையால் திருப்பத்தூர் தொகுதி தேர்தல் முடிவு தொடர்பான வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.