சுப்ரீம் கோர்ட்டில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு! நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வு
இந்திய உச்சநீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்றதை தொடர்ந்து, தற்போது பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.குஜராத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த சுனிதா அகர்வால், டெல்லி ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் தெலுங்கானா ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த அபரேஷ் குமார் சிங் ஆகிய 3 பேரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 3 பேரின் பதவியேற்பை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் பணிபுரியும் நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.இதில் நீதிபதி சுனிதா அகர்வால் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை 3 ஆக உயர்த்தியுள்ளார். இதற்கு முன்பு பி.வி. நாகரத்னா மற்றும் வி. மோகனா ஆகியோர் பெண் நீதிபதிகளாக பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, 2026-ம் ஆண்டு சட்டத்திருத்தத்தின் மூலம் உச்சநீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, தலைமை நீதிபதியை தவிர்த்து 33-ல் இருந்து 37 ஆக உயர்த்தப்பட்டது. தலைமை நீதிபதியையும் சேர்த்து உச்சநீதிமன்றத்தின் மொத்த sanctioned strength தற்போது 38 ஆக உள்ளது.

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் 34 நீதிபதிகள் பணியில் இருந்த நிலையில், தற்போது 3 புதிய நீதிபதிகள் பதவியேற்றதால் பணிபுரியும் பலம் 37 ஆக அதிகரித்துள்ளது. இதனால் அனுமதிக்கப்பட்ட 38 இடங்களில் ஒரு இடம் மட்டுமே காலியாக உள்ளது.புதிய நீதிபதிகளின் நியமனம் தொடர்பான பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் செப்டம்பர் 28-ம் தேதி செய்திருந்தது. அதன் பின்னர் மத்திய அரசு நியமனத்தை அறிவித்தது.
