"நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்காதீங்க" - திமுகவின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்.. ஜூலை 10-ல் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்!
கரூர் விபத்து விவகாரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சாட்சிகளைத் திசைதிருப்ப முயல்வதாகக் குற்றம் சாட்டி திமுக தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து திமுக தனது மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால், வரும் ஜூலை 10-ம் தேதி முதலமைச்சர் விஜய் கரூருக்குச் செல்வதில் இருந்த அரசியல் சிக்கல் முழுமையாக நீங்கியுள்ளது.
கரூர் விபத்து வழக்குத் தொடர்பாகத் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், தற்போதைய ஆளுங்கட்சியான தவெகவின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கின் சாட்சிகளைத் திசைதிருப்ப முயல்வதாகவும், எனவே இதற்கு உரிய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், திமுக தரப்பிற்குத் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். "அரசியல் ரீதியான எதிரிகளின் கருத்துகளுக்கோ அல்லது அவர்களது செயல்பாடுகளுக்கோ நீதிமன்றத்தால் எந்தவித தடையும் விதிக்க முடியாது" என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
"நீதிமன்றங்களை உங்களது அரசியல் லாபங்களுக்கான மேடையாகப் பயன்படுத்த வேண்டாம்" என்று திமுகவிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்த கடுமையான அணுகுமுறையினாலும், மனு தள்ளுபடி செய்யப்படும் என்ற சூழல் உருவானதாலும், திமுக தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.

கரூரில் நடந்த விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்த அரசியல் விவாதங்களுக்குப் பிறகு, வரும் ஜூலை 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
இதற்குத் தடை விதிக்கக் கோரும் மறைமுக முயற்சியாகத் திமுக இந்த வழக்கைத் தொடர்ந்ததாகத் தவெக தரப்பில் விமர்சிக்கப்பட்டது. தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் திமுகவின் மனு திரும்பப் பெறப்பட்டுள்ளதால், முதலமைச்சர் விஜய்யின் கரூர் பயணத்திற்கான அனைத்து சட்டச் சிக்கல்களும், தடைகளும் விலகியுள்ளன. இதனால் திட்டமிட்டபடி ஜூலை 10 அன்று முதலமைச்சர் விஜய் கரூர் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
