குலசையில் சூரசம்ஹாரம் நிறைவு.. மகிஷாசூரனை வதம் செய்தார் முத்தாரம்மன் - லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

 
குலசை குலசேகரப்பட்டினம் சூரசம்ஹாரம் முத்தாரம்மன்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நள்ளிரவில் கோலாகலமாக நிறைவடைந்தது.

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடைபெற்ற இந்த விழாவில், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு காளி, ராமர், அனுமார் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து கோயிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா

விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு, குலசேகரன்பட்டினத்தில் சுமார் 4,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், 10 கண்காணிப்பு கோபுரங்கள், 300 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யட்டிருந்தன. இதனிடையே, குலசை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் போக்குவரத்து நெரிசலையும் மீறி லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய சூரசம்ஹார நிகழ்வில், சிவப்பு பட்டு உடுத்தி வீரவாள் மற்றும் திரிசூலத்துடன் சிம்ம வாகனத்தில் முத்தாரம்மன் எழுந்தருளினார். பத்து கைகளில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தி, செண்டை மேளம் முழங்க, பக்தர்களின் ‘ஓம் காளி.. ஜெய் காளி..’ கோஷங்களுக்கு இடையே அம்மன் கடற்கரைக்கு வந்தடைந்தார். தொடர்ந்து, தீய சக்திகளை அழிக்கும் ஐதீகத்தின்படி நான்கு வடிவங்களில் வந்த மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்தார்.

முத்தாரம்மன் சூரசம்ஹாரம் குலசை

மனித தலையுடன் போர் புரிந்து வந்த மகிஷாசூரனை முத்தாரம்மன் முதலில் வதம் செய்தார். அடுத்ததாக சிங்க முகத்துடன் வந்த சூரனை தனது சூலாயுதத்தால் வீழ்த்தினார். எருது முகத்துடன் வந்து அம்மனைச் சுற்றிப் போரிட்ட மகிஷாசூரனை முத்தாரம்மன் சம்ஹாரம் செய்தார். இறுதியாகச் சேவல் உருவில் வந்த மகிஷாசூரனைச் சிம்ம வாகனத்தில் அமர்ந்தபடி முத்தாரம்மன் வதம் செய்தார்.

சூரசம்ஹாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முத்தாரம்மனுக்குச் சிறப்பு சாந்தாபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருவீதி உலாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முத்தாரம்மனைத் தரிசனம் செய்தனர்.