தடுப்பூசி போட்ட 5 குழந்தைகளுக்கு பாராசிட்டமாலுக்கு பதில் சர்க்கரை நோய் மருந்து! ICU-வில் அனுமதி!

 
para

 

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் பால்சானா பகுதியில் தடுப்பூசி முகாமின்போது குழந்தைகளுக்கு தவறான மருந்து வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போட்ட பிறகு வழங்க வேண்டிய பாராசிட்டமாலுக்கு பதிலாக 5 குழந்தைகளுக்கு சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தப்படும் Glimepiride 2 mg மருந்து தவறுதலாக வழங்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பால்சானா தாலுகாவில் உள்ள கானவ் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் பால்சானா-01 துணை சுகாதார மையத்தில் செப்.23 அன்று ‘மம்தா திவஸ்’ தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 7 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசிக்குப் பிறகு குழந்தைகளுக்கு காய்ச்சல் மற்றும் உடல் அசௌகரியம் ஏற்படாமல் இருக்க பாராசிட்டமால் வழங்குவது வழக்கமாகும்.ஆனால், இந்த முகாமில் 5 குழந்தைகளுக்கு பாராசிட்டமாலுக்கு பதிலாக Glimepiride 2 mg மாத்திரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மருந்து பொதுவாக சர்க்கரை நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

தவறான மருந்தை உட்கொண்ட பிறகு குழந்தைகளின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து 5 குழந்தைகளும் செப்.24 அன்று ICU/PICU பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 3½ மாதம் முதல் ஒரு வயது வரையிலான குழந்தைகளும் இருப்பதாக குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் பிரஃபுல் பான்சேரியா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி

சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர். தவறான மருந்தை வழங்கியதாக கூறப்படும் பெண் சுகாதாரப் பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே, பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, இதுபோன்ற தவறு மீண்டும் நடைபெறாமல் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி முகாமில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மருந்தில் ஏற்பட்ட இந்த தவறு குஜராத் சுகாதாரத்துறையில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.