செல்போனை உடைத்த தந்தை... குக்கர் மூடி, கத்தியால் கொலை செய்த மகள் !

 
குஜராத்

 

குஜராத் மாநிலம் சூரத்தில், செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை கொலை செய்ததாக 22 வயது மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சூரத்தின் கோசாட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் சவுகான் (55). இவரது மகள் காஜல் (22). காஜல் அடிக்கடி செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பதாகவும், வீட்டு வேலைகளில் உதவுவதில்லை என்றும் அவரது தாயார் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் 31-ம் தேதி இரவு, இது தொடர்பாக ரமேஷ் மகளைக் கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், காஜலின் செல்போனைப் பிடுங்கி தரையில் வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காஜல், சமையலறையில் இருந்த குக்கர் மூடி மற்றும் கத்தியால் தந்தையைத் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்த ரமேஷை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் அம்ரோலி போலீசார் காஜலைக் கைது செய்து கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.