முடங்கியது சூரத் ஜவுளித் தொழில்... சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் தொழிலாளர்கள் வெளியேற்றம் ... கலக்கத்தில் உரிமையாளர்கள்!
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஜவுளித் தொழில் தற்போது கடும் சவாலைச் சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாகச் சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 15 நாட்களாக எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். 2026 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தத் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியுள்ளதால் பல ஆலைகள் தங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.
"अब नहीं आऊंगा दोस्त, अब नहीं आऊंगा"
— Ranvijay Singh (@ranvijaylive) April 19, 2026
गुजरात के सूरत स्टेशन से बड़ी संख्या में मजदूर लौट रहे हैं. क्योंकि गैस की किल्लत की वजह से वहां काम ही नहीं बचा.
इसके अलावा लोगों को खाने तक की दिक्कत हो रही है. भयंकर हालात हैं. pic.twitter.com/08gScyTLOK
சூரத் ஜவுளி ஆலைகளில் ஒடிசா, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எரிவாயு தட்டுப்பாட்டால் உணவின்றித் தவிக்கும் இவர்கள் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஜவுளி உற்பத்தி நாளொன்றுக்கு 65 மில்லியன் மீட்டரிலிருந்து 45 மில்லியன் மீட்டராகக் குறைந்து பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
தட்டுப்பாட்டைப் பயன்படுத்திச் சமையல் எரிவாயு ஒரு கிலோ 500 ரூபாய்க்கு மேல் கறுப்புச் சந்தையில் விற்கப்படுவதாகத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாதாரண சிலிண்டரின் விலை 4,000 ரூபாயைத் தாண்டியுள்ளதால் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களால் அதனை வாங்க முடியவில்லை. ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்து வருவதால் அங்குப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசு உடனடியாகத் தலையிட்டு எரிவாயு விநியோகத்தைச் சீர் செய்யாவிட்டால் ஜவுளித் தொழில் முழுமையாக முடங்கும் அபாயம் உள்ளது.
