பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர், புரோக்கர் கைது - சேலத்தில் பரபரப்பு!

 
சேலம் சர்வேயர் இலஞ்சம்

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் தனது தந்தையின் வீட்டைத் தன் பெயருக்கு மாற்றக் கோரி விண்ணப்பித்த கூலித்தொழிலாளியிடம் லஞ்சம் கேட்ட நில அளவையர் மற்றும் புரோக்கரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.

சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கதிரவன், தனது தந்தை பெயரிலுள்ள வீட்டைத் தனது பெயருக்குப் பட்டா மாற்றம் செய்ய அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்தப் பட்டாவை வழங்குவதற்கு நில அளவையர் முருகேசன் மற்றும் புரோக்கர் பூவரசன் இணைந்து ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.

பணம் ரொக்கம் லஞ்சம் பறக்கும்படை தேர்தல்

லஞ்சம் கொடுக்க விரும்பாத கதிரவன் இது குறித்துச் சேலம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அவர்களின் திட்டத்தின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கதிரவன் வழங்கியபோது, அதைக் கைபற்றிய நில அளவையர் முருகேசன் மற்றும் புரோக்கர் பூவரசன் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.

பரபரப்பு: அரசு அலுவலகத்தில் பட்டா போன்ற அடிப்படையான சேவைகளுக்கு லஞ்சம் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த அதிரடி கைது நடவடிக்கை சேலம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.