இந்திய டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கம் - சூர்யகுமார் யாதவ் வேதனை!
இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வெற்றிகரமாகப் பெற்றுத் தந்த பிறகும், டி20 கேப்டன் பொறுப்பிலிருந்தும் அணியிலிருந்தும் தான் திடீரென நீக்கப்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது தலைமையில் இந்திய அணி ஒரு டி20 தொடரில்கூட தோற்றதில்லை என்றும், ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையை வென்றுகொடுத்த பிறகும் இத்தகைய திடீர் மாற்றம் ஏன் என்று தனது பேட்டியில் அவர் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இது தனக்கு ஏமாற்றமளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அணியை வெற்றிகரமாக முன்நோக்கி நடத்திச் சென்று, ஒலிம்பிக்ஸ் மற்றும் வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையிலும் அணியை வழிநடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் 2026-லேயே இந்த நிலை மாறும் என தான் துளியும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அணி அறிவிக்கப்படுவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு தன்னைத் தொடர்புகொண்ட தேர்வுக்குழுவினர், அடுத்தகட்டத்திற்கு நகர வேண்டிய நேரம் இதுவெனத் தெரிவித்ததாகக் கூறியுள்ள சூர்யகுமார், அது அணியின் நலனுக்கான முடிவாக இருக்கலாம் கருதி தான் உடனடியாக எந்தவித எதிர்வினையும் ஆற்றவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர் என்றும், தன் நாட்டுக்காக எப்போது அழைத்தாலும் தொடர்ந்து விளையாடத் தயார் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
