டி20 கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம் - புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா இடையே போட்டி!

 
சூர்யகுமார் யாதவ் சூர்யகுமார் யாதவ்

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவை நீக்க பிசிசிஐ மற்றும் தேர்வுத் குழு தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது. மார்ச் மாதம் அவரது தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்த போதிலும், இந்த அதிரடி முடிவு எடுக்கப்படவுள்ளது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தற்போது தான் டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றியது என்றாலும், தேர்வுத் குழுவின் இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னால் சில முக்கியக் காரணங்கள் உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டி20 உலகக் கோப்பைத் தொடரிலும், அதனைத் தொடர்ந்து நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரிலும் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 13 இன்னிங்ஸ்களில் வெறும் 270 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

திலக் வர்மா

35 வயதாகும் சூர்யகுமார் யாதவ், பேட்டிங்கில் ஃபார்ம் அவுட் ஆகியுள்ளதால் அவர் டி20 அணியில் ஒரு சாதாரண வீரராக இடம் பிடிப்பதற்கே தற்பொழுது கடுமையான போட்டி நிலவுகிறது. பேட்டிங்கில் அவரது இடம் உறுதியற்றதாக மாறும் போது, அவர் கேப்டனாக நீடிப்பது சரியாக இருக்காது எனத் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுத் குழு கருதுகிறது.

அடுத்த டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரவுள்ள நிலையில், தற்போதிருந்தே ஒரு இளம் மற்றும் புதிய கேப்டனின் கீழ் அணியை வழிநடத்த பிசிசிஐ விரும்புகிறது. சூர்யகுமார் யாதவுக்குப் பதிலாக இந்திய டி20 அணியை வழிநடத்தப் போகும் அடுத்த கேப்டன் யார் என்ற பந்தயத்தில் தற்பொழுது மூன்று முக்கிய வீரர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

திலக் வர்மா

தற்போதைய நிலவரப்படி சூர்யகுமாருக்கு அடுத்தபடியாக கேப்டன் பொறுப்பை ஏற்க ஸ்ரேயாஸ் ஐயர் மிக முக்கிய முன்னிலையில் உள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வழிநடத்திய அனுபவம் மற்றும் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக இருக்கும் அவரது சீனியாரிட்டி அவருக்குச் சாதகமாக உள்ளது. இருப்பினும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் சில ஆலோசனைகள் பாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்வுத் குழுவில் உள்ள சில முக்கிய உறுப்பினர்கள், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இளம் வீரரான திலக் வர்மாவை கேப்டனாக நியமிக்கலாம் என அதிரடிப் பரிந்துரை செய்துள்ளனர். இதன் முதற்கட்டமாக, இலங்கைச் செல்லவுள்ள இந்தியா 'ஏ' அணிக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டு அவரது தலைமைப் பண்பு சோதிக்கப்படவுள்ளது.

தற்போதைய சூழலில் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் ஆதரவு சஞ்சு சாம்சனுக்கு இருப்பதாகக் கூறப்படும் வேளையில், இஷான் கிஷனின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.