இந்திய எல்லைக்குள் கிடந்த சந்தேக ட்ரோன்… ஜம்மு காஷ்மீரில் பிஎஸ்எஃப் தீவிர விசாரணை!

 
ட்ரோன்

 

ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில், இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே சந்தேகத்திற்குரிய ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை எல்லைப் பகுதியில் ட்ரோன் போன்ற பொருள் பறந்ததாகப் பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பா மாவட்டத்தில் உள்ள லால்பாம்கிமா எல்லைப் பாதுகாப்பு முகாம் பகுதியில் பிஎஸ்எஃப் வீரர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சர்வதேச எல்லையிலிருந்து சுமார் 700 முதல் 800 மீட்டர் தொலைவில், இந்தியப் பகுதிக்குள் உள்ள விவசாய நிலத்தில் ட்ரோன் ஒன்று கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது DJI Matrice 300 RTK மாடல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ட்ரோனுடன் வெடிபொருள் அல்லது வேறு பொருட்கள் இணைக்கப்பட்டிருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ட்ரோன் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறப்பிடம், உரிமையாளர், அது பறந்த பாதை உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய உள்ளனர். கடத்தல் அல்லது கண்காணிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பதும் விசாரிக்கப்படுகிறது.

ட்ரோன் பாகிஸ்தானிலிருந்து வந்ததாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், அதன் உண்மையான தோற்றம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.