கள்ளக்காதலி மீது சந்தேகம்... தகராறில் சிறுவன் கொலை; காதலன் தற்கொலை!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட சந்தேகத்தால், காதலியின் மகனைக் கொலை செய்துவிட்டு, காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓமலூர் அருகே உள்ள கருத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (33). இவரது கணவர் ராஜ்குமார் இவரைப் பிரிந்து வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். சத்யா ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். அங்கு மேலாளராகப் பணியாற்றிய சக்திவேல் (40) என்பவருடன் சத்யாவுக்குக் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சக்திவேலுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 3 மாதங்களாகச் சத்யா தன்னிடம் சரியாகப் பேசாததால், அவர் வேறொருவருடன் பழகுகிறாரோ என்று சக்திவேல் சந்தேகமடைந்துள்ளார். நேற்று நள்ளிரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்ற சக்திவேல், கதவைத் தட்டியுள்ளார். அப்போது உள்ளே இருந்து சத்யா யாரோ ஒருவருடன் "கொஞ்சிப் பேசும்" சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த சக்திவேல், கதவைத் திறந்தவுடன் உள்ளே புகுந்து மின்விளக்கை அணைத்துவிட்டு, சத்யாவையும் அவரது 10 வயது மகன் கிஷாந்த்தையும் சரமாரியாகக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினார்.

கழுத்து மற்றும் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் கிஷாந்த், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்தக் கொடூரத் தாக்குதலில் சத்யாவின் மணிக்கட்டு துண்டானது. அவர் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய சக்திவேலை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று காலை கருப்பூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் அவர் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
ஓமலூர் டி.எஸ்.பி சஞ்சீவ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். துண்டான கையை மீட்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு தவறான உறவால் ஏற்பட்ட சந்தேகம், அப்பாவிச் சிறுவனின் உயிரைப் பறித்ததோடு இரு குடும்பங்களையும் சீரழித்துள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
