செம... ஏஐ மூலம் காசநோய் கண்டறியும் 'சுவாசா' செயலி... புதிய தொழில்நுட்பப் புரட்சி!
ஆந்திர மாநில அரசு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காசநோயைக் கண்டறியும் ‘சுவாசா’ எனும் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ரத்தன் டாடா புத்தாக்க மையம் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த நவீன செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் செல்லாமலேயே ஆரம்பக்கட்டப் பரிசோதனைகளை மேற்கொள்ள இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் செயலியானது ஒருவரின் இருமல் சத்தம் மற்றும் சுவாச ஒலிகளைத் துல்லியமாக ஆய்வு செய்து, அவருக்குக் காசநோய் அல்லது ஆஸ்துமா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் திறன் கொண்டது. நவீன அல்காரிதம்கள் மூலம் ஒலிகளைப் பகுப்பாய்வு செய்வதால், மிக விரைவாகவே முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும். நோய்த்தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிரிழப்புகளைத் தடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இந்தத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 8,000-க்கும் மேற்பட்டோருக்கு இந்தச் செயலி மூலம் வெற்றிகரமாகச் சுவாசப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தின் வெற்றி மற்றும் துல்லியத்தன்மையைப் பொறுத்து, மாநிலம் முழுவதும் உள்ள பிற மாவட்டங்களுக்கும் சுவாசா செயலியின் பயன்பாட்டை விரிவுபடுத்த ஆந்திரச் சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
