பிரபல இசையமைப்பாளர் மீது பாடகி ஸ்வாகதா பாலியல் புகார்... அதிரவைக்கும் குற்றச்சாட்டு!

 
ஸ்வாகதா ஸ்வாகதா
 

 

தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக வலம் வரும் ஸ்வாகதா கிருஷ்ணன், பிரபல இசையமைப்பாளர் ஒருவர் மீது பாலியல் ரீதியான புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தனது ஸ்டூடியோவிற்கு அழைத்த அந்த இசையமைப்பாளர், தன்னிடம் மிகவும் அநாகரிகமாக அத்துமீறி நடந்து கொண்டதாக ஸ்வாகதா தெரிவித்துள்ளார். மேலும், அந்த இசையமைப்பாளர் பல பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்து ரசிக்கும் பழக்கம் கொண்டவர் என்றும், இந்த விவகாரங்கள் அனைத்தும் அவரது மனைவிக்கும் நன்றாகத் தெரியும் என்றும் கூறி அதிர வைத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தற்போது புதிய திருப்பமாக, அந்த இசையமைப்பாளரின் பெயரை வெளியிட ஸ்வாகதா நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். ஒருவேளை தான் பெயரைச் சொன்னால் அவர் தொடுக்கும் அவதூறு வழக்கிற்கான சட்டச் செலவுகளை யாராவது ஏற்றுக் கொண்டால், உண்மையை உடைக்கத் தயார் என்று அவர் கூறியுள்ளார். சட்டப்படி போராடி சம்பந்தப்பட்ட நபருக்கு உரியத் தண்டனையைப் பெற்றுத் தருவேன் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் ஸ்வாகதாவின் இந்தத் துணிச்சலான முடிவு, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இசையமைப்பாளரின் பெயர் இன்னும் மர்மமாகவே இருப்பதால், அந்த நபர் யார் என்பதை அறியத் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது குறித்துச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்தப் புகார் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.