தாய் முன்னே பரிதாபம் ... நீச்சல் பழகிய பிளஸ் 2 மாணவி குட்டையில் மூழ்கி பலி!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் யாமினி (17). இவர் அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.சம்பவத்தன்று யாமினி, தனது தாயாருடன் பக்கத்தில் உள்ள ஒரு பழைய கல்குவாரி குட்டைக்குத் துணி துவைக்கச் சென்றுள்ளார்.

துணி துவைத்து முடித்ததும், யாமினிக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க அவரது அம்மா ஆசைப்பட்டுள்ளார். பாதுகாப்புக்காக யாமினியின் உடலில் துணியைக் கட்டி தண்ணீரில் இறக்கி நீச்சல் சொல்லி கொடுத்துள்ளார்.அப்போது, எதிர்பாராத விதமாகக் குட்டையின் ஆழமான பகுதிக்குச் சென்ற யாமினி, தண்ணீருக்குள் மூழ்கிவிட்டார்.

மகள் தண்ணீருக்குள் தத்தளிப்பதைப் பார்த்து அலறிய தாயின் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், உடனே ராணிப்பேட்டை தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி யாமினியின் உடலை மீட்டனர். அம்மாவின் கண் முன்னாடியே மகள் தண்ணீரில் மூழ்கி இறந்த இந்தச் சம்பவம், அந்தக் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
