கனமழையால் தத்தளித்த தி.நகர்... ஸ்கூட்டரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் ஆனந்த்

 
ஆனந்த்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாகக் கள ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில், நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் ஆடம்பர காரைத் தவிர்த்துவிட்டு ஸ்கூட்டரில் சென்று ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தி.நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதுடன் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. மழைக்கால நிவாரணப் பணிகளோ அல்லது தனது ஆய்வுகளோ போக்குவரத்து நெரிசலால் தொய்வடையக் கூடாது எனக் கருதிய அமைச்சர் என். ஆனந்த், தனது காரைத் தவிர்த்துவிட்டு ஸ்கூட்டரைத் தேர்ந்தெடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) தியாகராய நகர் பேருந்து நிலையம் மற்றும் அதன் உட்புறச் சாலைகளில் ஸ்கூட்டரிலேயே வலம் வந்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரையும், நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளையும் நேரில் பார்வையிட்டார். தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் மூலம் விரைவாக வெளியேற்ற வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது அப்பகுதிக்கு வந்த அமைச்சர், அங்கு மழைநீரால் பாதிக்கப்பட்டு நின்றிருந்த பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். நிவாரணப் பணிகள் உடனடியாகச் செய்து முடிக்கப்படும் என அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மழைக்காலத்தில் காரில் வலம் வருவதைத் தவிர்த்துவிட்டு, இருசக்கர வாகனத்திலேயே நேரில் சென்று கள நிலவரங்களை ஆய்வு செய்த அமைச்சரின் இந்த எளிய மற்றும் அதிரடியான செயல் குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.