டி20 உலகக் கோப்பை... 24 அணிகளாக விரிவுபடுத்த ஐசிசி பரிசீலனை!

 
கிரிக்கெட் டி20

ஆடவர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 20-இல் இருந்து 24-ஆக உயர்த்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

கடந்த 2022-ஆம் ஆண்டு வரை 16 அணிகள் பங்கேற்ற டி20 உலகக் கோப்பைத் தொடர், 2024 மற்றும் 2026 ஆம் ஆண்டு தொடர்களில் 20 அணிகளாக உயர்த்தப்பட்டது. கிரிக்கெட் விளையாட்டை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் நோக்கில், 2028-ஆம் ஆண்டிற்குப் பிறகான தொடர்களில் அணிகளின் எண்ணிக்கையை 24-ஆகவும், எதிர்காலத்தில் 32 அணிகள் பங்கேற்கும் உலகப் பெரிய தொடராகவும் மாற்ற ஐசிசி திட்டமிட்டுள்ளது.

ஐசிசி கிரிக்கெட் டி20

இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில், உகாண்டா, பப்புவா நியூ கினியா, இத்தாலி, ஹாங்காங், ஜெர்சி, நைஜீரியா போன்ற பல அசோசியேட் நாடுகளுக்கு உலகக் கோப்பையில் விளையாடும் நல்வாய்ப்பு கிடைக்கும்.

24 அணிகள் பங்கேற்கும் பட்சத்தில், முதற்கட்டமாகத் தலா 4 அணிகள் கொண்ட 6 குழுக்களாக (6 Groups) பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 'சூப்பர் 12' சுற்றுக்கு முன்னேறும் வகையில் போட்டிகள் திட்டமிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் வளரும் அணிகள் காட்டிய சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, இத்திட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி விரைவில் வெளியாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.